அறிமுகம்
மார்ச் 8 1995
புலிகளிடமுள்ள கைதிகள் பற்றிய விவரங்களின் தொகுப்பு 5-10 வரையான எமது அறிக்கைகளில் வெளிவந்தது. கொடூரமாகவும் தரக்குறைவாகவும் கைதிகள் நடத்தப்படுவதன் கருத்தியல் பின்னணி பற்றியும் இவ்வறிக்கைகளில் அலசப்பட்டது. புலிகள் மக்கள்பாலும் தமது இயக்க உறுப்பினர்கள் தொடர்பாகவும் கொண்டுள்ள மனோபாவம் புலிகளது சமூகப்பார்வை பற்றிய வினாக்களை எழுப்புகிறது.
விரிந்து விசாலமுற்ற பார்வையை மக்களுக்கும் இயக்க உறுப்பினர்களுக்கும் கொடுக்கும் வகையிலான விடுதலை ஆட்சியமைப்பை உருவாக்குவதன் மூலம் வாழ்வின் சாராம்சத்தை உயர்த்துவதற்கு பதில் அதற்கு எதிரான கைங்கரியத்தையே புலிகள் தமது ஆட்சியின் கீழ் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். அதிகாரத்தில் இருப்பவர்கள் பாவிப்பதற்கான பண்டங்களாகவே அனைவரும் மதிக்கப்படுகின்றனர். தலைவர்கள் அங்கத்தவர்களுக்கு கொடுக்கும் மதிப்பின் அதே பெறுமானத்தினைத் தான் அங்கத்தவன் ஒருவன் தான் சித்திரவதை செய்யும் கைதிகளிடம் காட்டுகின்றான். மனிதன் ஒருவனில் மதிக்கத்தக்க குணாம்சங்கள் அர்ப்பணிப்பு- அதாவது மற்றைய இயக்கங்களில் சேர்ந்தவர்களில் பலர் தங்களை மக்களின் நலனுக்காகவும் இலட்சியத்துக்காகவும் தியாகம் செய்ய தயாராயிருந்தமை- அனைத்தும் அர்த்தமற்றுப் போய் விட்டது. சிறுவர்களைச் சித்திரவதையாளர்களாகப் பாவிக்கும் புலிகள் அமைப்பானது சிறைச்சாலைகளும் வதைமுகாம்களும் கொண்ட வலைப்பின்னாலாக வியாபகமடைந்துள்ளது. தனது சொந்த அதிகாரபீடமே திணறும் வகையில் அது தனி நபர்கள் பற்றிய தகவல்களை குவித்து வைத்திருக்கின்றது. எமது சமூகத்தில் மனிதம் தாழ்ந்து போய் விட்டதையே இது பிரதிபலிக்கின்றது. எனினும் புலிகளின் இந்த இலட்சியத்துக்காக பரிந்து பேசுபவர்கள் உலகில் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கின்றனர். பெண்கள் பற்றிய புலிகளின் கண்ணோட்டமும் கூட அதன் பொதுவான சமூகப்பார்வை மூலமே நிர்ணயிக்கப்படுகின்றது. ஆயுதம் தாங்கிய பெண்கள் இயக்கத்தில் இருப்பதை விதந்துரைக்கும் இப்பரிவாளர்கள் புலிகள் விடுதலைக்காக போராடுகிறார்கள் என்ற பிரமையையே ஏற்படுத்துகின்றனர். சமூகப்பிரக்ஞை கொண்ட செல்வி தியாகராஜா, ராஜனி திரானகம ஆகிய இரு பெண்களும் புலிகளின் வன்முறைக்குப் பலியானார்கள். புலிகளின் சிறையிலிருக்கும் அரசியல் கைதியான பெண்கவி செல்வி தியாகராஜா, இரண்டு சர்வதேச இலக்கியப் பரிசுகளை சிறை சென்ற பின் பெற்றிருக்கிறார்.
இங்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் நிகழ்வுகள் மூன்று வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தவை என்பதை குறிப்பிட விரும்புகின்றோம். வடபகுதியிலிருந்து தகவல்கள் மந்த கதியில் வருவது தெரிந்ததே. இப்பற்றாக்குறையே இவ்விடயம் பதிவு செய்யப்பட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறது. இப்பதிவுகள் வெறும் சரித்திரத்திற்காகவல்ல.
புலிகளின் தொடர்ந்த இருப்பும் அதன் மாற்றப்படாத அரசியல் நடவடிக்கைகளும் தொடர்ந்து கவலைக்குரிய விடயங்களாகவே இருக்கின்றன. இன்றிருக்கும் பெண் கைதிகளின் கதி அவர்கள் எந்த எண்ணிக்கையில் இருப்பினும் கவனிக்கப்பட வேண்டிய விடயமே.
இங்கு ஒரு கேள்வி எழுப்பப்பட வேண்டியுள்ளது. தமிழ் சமூகம் மத்தயில் தார்மீக ஆதரவைக் கொண்டுள்ளதாக கூறப்படும் புலிகளின் ஆட்சியானது, அதிருப்தியாளர்களை மட்டுமல்ல அவர்களது தாய்மார்களையும், சகோதரிகளையும், மனைவியர்களையும் பேத்திமார்களையும் கூட இருட்டறைக்குள் பூட்டிவைத்து சித்திரவதை செய்யும் அமைப்பாக உருவெடுத்திருக்கின்றது. இதன் தாற்பரியம் தான் என்ன?
சிறைகளின் அமைவிடங்கள்
தற்போது அவுஸ்திரேலியாவிலிருக்கும் கூட்டணி அரசியல்வாதியும் சட்டத்தரணியுமான அம்பிகைபாலனின் மட்டுவில் வீடு, புலிகளின் பெண்கள் வதை முகாமாக மாற்றப்பட்டு இருந்தது. இது பல அறைகள் கொண்ட விசாலமான வீடு. சிறு அறையொன்றினுள் ஏறத்தாழ 25 பேர் வரை வைக்கப்பட்டு இருந்தனர். நில சுரங்க அறைகளும் உள்ளே கட்டப்பட்டன. 1990 மார்ச்சில் 500 கைதிகள் இருந்தனரென அதன் கைதிகள் அபிப்பிராயப்பட்டனர். குறைந்தது 200 கைதிகள் வரையிலாவது இருந்திருக்கலாமென நாம் நம்புகின்றோம். இம்முகாமுக்கு மூன்று நான்கு மாதங்களின் பின் மீண்டும் கொண்டு செல்லப்பட்ட கைதிகளின் தகவல்களின் படி இது கைதிகளை நீண்ட காலம் சிறை வைக்கும் முகாமாக தெரியவில்லை. ஏனெனில் முன்னிருந்த கைதிகள் மாற்றப்பட்டு இருந்ததை அவர்கள் அவதானித்தனர்.
இம்முகாமிலிருந்த பெண் கைதிகள் எதிர்பாராத சமயங்களில் நித்திரையிலிருந்து அடித்து எழுப்பப்பட்டு சுரங்க அறைகளுள் இழுத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டனர். வெளியே துப்பாக்கிச்சூட்டுச் சத்தங்கள் கேட்கும். அடுத்தது நீ தானென கைதிக்கு சொல்லப்படும். கடுமையான சித்திரவதைக்கென தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள், சிறிய முகாம்களுக்கு – பெரும்பாலும் தென்மராட்சிக்கு மாற்றப்படுவர். தென்னந்தோப்புக்குள் அமைந்த இம்முகாமில் ஒரே சமயத்தில் 50 பேர் வரை சிறை வைக்கப்படுவர். இங்கு சித்திரவதை செய்வதில் இன்பம் காண்பதன் உச்சக்கட்டம் ஆரம்பத்தில் இருந்தே தொடங்கும்.
வேறு முகாம்களிலும் பெண் கைதிகள் சிறை வைக்கப்பட்டிருந்தனர். கோப்பாய் பெண்கள் முகாம் இதில் ஒன்று. இங்கு பல நூற்றுக்கணக்கான பெண்கள் கொண்டு செல்லப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். பலர் இறுதியாக விடுதலை செய்யப்பட்டனர். செல்வி தியாகராஜா போன்ற வெளியுலகுக்கு தெரிந்தவர்களும் இங்கு சிறைப்பட்டிருந்தனர். செல்வி விடுதலையாகவில்லை. மிகவும் மோசமான சித்திரவதைக்கு உள்ளானவர்கள் புதைகுழிக்கு அனுப்பப்பட்டதாக கைதிகள் தெரிவித்தனர்.
சிறைக்காவலர்கள்
ஈவா எனும் ஜம்பது வயது மதிக்கத்தக்க பெண்ணொருத்தி மட்டுவில் முகாமிற்கு பொறுப்பாயிருந்தார். சித்திரவதையாளர்களின் வயது 14ல் இருந்து தொடங்குகிறது. ஒரு கைதியை தடியால் அடிப்பதற்கு சிலவேளைகளில் ஓரே சமயத்தில் பத்து பேர் தேவைப்படும். வயதைப் பொறுத்து அடிக்கும் வேகமும் அதிகரிக்கும். ஈவா வேறு சில முகாம்களுக்கும் பொறுப்பாயிருந்தாரென தெரிய வருகின்றது.
சிறிய முகாம்களில் இருந்த பெண்புலிகளில் அஷாந்தி, அகலி, ஆனந்தி, மோகனா, பைரவி, மாதங்கி ஆகியோர் சிலர். ஒவ்வொருவரும் விசித்திர குணாம்சங்களைக் கொண்டவர்கள். ஆனாலும் ஈவிரக்கமற்ற தன்மையில் இவர்களிடையே வேறுபாடு காண்பது அரிது.
அகலி பெண்களை இரத்தம் சிந்தும் வரை அடித்து விட்டு அவர்கள் தண்ணீர் தருமாறு இரங்கும் வரை வெய்யிலில் நிற்க விடுவார். மலகூடத்துக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் கோப்பையொன்று அக்கைதி முன் வைக்கப்படும். அகலி கைதியை அடிப்பதற்கு தடியொன்றை தயார் நிலையில் வைத்துக் கொண்டு கைதியை நையாண்டி செய்தவாறு கைதி கோப்பையில் கை வைக்கும் வரை காத்திருப்பார். சிலவேளைகளில் கைதியை தனது சப்பாத்து கால்களால் உதைத்து நிலத்தில் உருட்டி எடுப்பார். கைதியின் கண்கள் பெரும்பாலும் கட்டப்பட்டிருக்கும். கண் கட்டை அவிழ்க்கும் நேரத்தில் கைதியின் தலையில் அடித்து மாதங்கி கைதிகளை வரவேற்பார்.
சிலவேளைகளில் புலிகளின் ஆண் உறுப்பினர்கள் முகாம்களுக்கு வாகனங்களில் விஜயம் செய்வர். அச்சமயங்களில் கைதிகள் நேரத்துடனேயே அடைக்கப்படுவர். அதன் பின் பெரும் கொண்டாட்டம் தொடரும். மறுநாள் காலை " மாதங்கி, நீ மொறிஸ் மைனர் வாங்கினாயாக்கும்" என்பது போன்ற பகடிகள் - அன்றிரவு அவர் தங்கியிருந்த வாகனத்தைக் குறிப்பிட்டுச் சொல்லப்படும். நாங்கள் ஈபிஆர்எல்எவ் மாதிரி கதைத்ததை நீங்கள் கேட்டீர்களா என்று இகழ்வாக பெண்புலிகள் கைதிகiளைப் பார்த்து கேட்பர். முகாம்களில் பெண்களை மட்டுமே கண்டதாக சொல்லுமாறு கைதிகளுக்கு பின்னர் கட்டளையிடப்படும்.
மாத்தையா கோஷ்டியினருக்கு எதிரான திடீர் சதி காரணமாக இருக்கலாம். ஆகஸ்ட் 91ல் சலீம் திடீரென பதவியிறக்கம் செய்யப்பட்டார். அதுவரை இவர் பெண்கள் முகாமுக்கு தினமும் வருவார். இவரது வார்த்தைப் பிரயோகம் கைதிகளால் சகிக்க முடியாத அளவுக்கு மோசமாக இருக்கும். பெண்களை மிக இழிவுபடுத்தும் இவரது கெட்ட வார்த்தைகள் பல வருடங்களுக்கு அவர்களால் மறக்க முடியாத அளவுக்கு கேவலமாக இருக்கும். இளையவர், முதியவர் என்ற பேதமின்றி அவரது வார்த்தைப் பிரயோகங்கள் அசிங்கமாக அமைந்திருக்கும்.
ஏதாவது சிறிதளவு இரக்கம் இம்முகாம்களில் காட்டப்படும் என்றால் அது ஒரு தற்செயல் நிகழ்வே. ஏதாவது உறவுமுறை அல்லது முன்னைய தொடர்புகள் காவலர்களுக்கும் கைதிக்கும் இருந்திருப்பின் இது ஓரளவு சாத்தியம்.
கோப்பாய் பெண்கள் முகாமில், ஒருநாள் ஒரு கைதி அம்முகாம் பொறுப்பாளரிடம் போய் மன்றாடினார். பொறுப்பாளர் எழுந்து கைதியை உதைத்ததில் சுவருடன் தலை மோத விழுந்தார்.
ஒரு கைதியின் அநுபவம்
மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைச் சேர்ந்த பவளம்மா என்னும் 53 வயதுடைய பெண்ணின் அனுபவத்தை இங்கு தருகின்றோம். பவளம்மா 1990 மார்ச் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்திய சமாதானப் படை வெளியேறிய பின் புலிகள் அப்பிரதேசத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
பவளம்மாவிற்கு மூன்று பிள்ளைகள். அவரது கணவர் 1977ல் இறந்துவிட்டார். பவளம்மா அதைத் தொடர்ந்து 1982-84 வரை அபுதாபிக்குச் சென்று வேலை பார்த்தார். அவர் இல்லாத சமயத்தில் அவரது மூத்த மகன் - க.பொ.த(சாதாரண தரம்) சித்தியடைந்து விட்டு வேலையற்று இருந்தவர்- ஈபிஆர்எல்எவ் இல் இணைந்து கொண்டார். இவர் ஈபிஆர்எல்எவ் இருந்து விரைவில் விலகிக்கொண்டாலும் தொடர்புகளை வைத்திருந்தார். இரண்டாவது மகன் ஈபிஆர்எல்எவ் இல் சேர்ந்து தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருந்தார். கடைசி மகனும் ஈபிஆர்எல்எவ் இல் சேர்ந்து பின்னர் விலகி மெக்கானிக்காக யாழ் நகரில் வேலை பார்த்து, பின்னர் 1990ல் வெளிநாடு போக ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். 1989ல் மூத்த மகன் கொழும்பிற்குச் சென்று வெளிநாடு போக முயற்சிக்கையில் இலங்கை அரச படைகளின் அனுசரணையுடன் புலிகள் அவரைக் கைது செய்து யாழ்ப்பாணம் கொண்டு சென்றனர்.
பவளம்மா தனது மெக்கானிக் மகனிடம் செலவுக்குப் பணம் வாங்க யாழ்நகர் சென்ற போது கைது செய்யப்பட்டார். வெளிநாட்டிற்கு செல்லவிருந்த இம்மகனும் கைது செய்யப்பட்டார். பவளம்மாவின் சிறை அநுபவங்களில் முக்கியமான சிலவற்றைக் கீழே தருகின்றோம்.
பவளம்மா, வானில் வந்த பெண் புலிகளால் கைது செய்யப்பட்டார். வானின் சாரதியான ஜயாத்துரை பவளம்மாவுக்கு தெரிந்தவர். பவளம்மா நல்லூர் பெண்கள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு கண்கள் கட்டப்பட்ட நிலையில் தரையில் கிடக்க வைக்கப்பட்டார். அங்கிருந்து மட்டுவிலிலுள்ள பிரதான பெண்கள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு தனி அறை ஒன்றினுள் விடப்பட்டு அவரது கண்கட்டு அவிழ்க்கப் பட்டது. 5 பெண் புலிகள் அவர் அங்கு வந்த காரணத்தை கேட்க தொடங்கினர். இதிலிருந்து அவர்களுக்கு பவளம்மா பற்றிய முன்னறிவித்தல் ஏதும் கொடுக்கபடவில்லை என்பது தெரிந்தது. பவளம்மா தான் தனது மகனிடம் வந்த காரணத்தை கூறிய போது மகனுக்கு அங்கிருந்து வெளியேறுவதற்கான தகவலைக் கொடுக்க வந்தாயாவென பெண்புலிகள் வினவினர். பின்னர் அவர் தனியான அறையொன்றினுள் வைத்துப் பூட்டப்பட்டார். இன்னொரு குழுவினர் வந்து விசாரித்தனர். அவரது பணத்தையும் நகையையும் பறிமுதல் செய்தனர். நகைகள் எவ்வாறு கிடைத்தன என பவளம்மாவிடம் அவர்கள் கேட்டபோது அவை தமிழ் மரபின்படி தனது பெற்றோர் தந்த சீதனமென கூறினார். (தமது எதிரிகளின் குடும்பங்கள், கொள்ளையடித்த சொத்துக்களை வைத்திருப்பதாக புலிகளின் பிரச்சாரம் பறைசாற்றுகின்றது.) அதனைத் தொடர்ந்து ஜந்து பெண்புலிகளால் தாக்கப்படுவதிலிருந்து சித்திரவதை தொடங்கியது. கொடுமைக்கார ஈவாவின் தலைமையில் பெண்புலிகள் கைகளில் தடிகளுடன் சித்திரவதையை நள்ளிரவு வரை தொடர்ந்தனர். பவளம்மா பின்னர் விலங்கிடப்பட்டு 25 கைதிகளுள்ள ஓர் அறைக்குள் அடைக்கப்பட்டார்.
அவர் அடைக்கப்பட்ட காலப்பகுதி முழுவதும் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் ஓரே தன்மை வாய்ந்த மாமூலான கேள்விகள். பவளம்மாவின் விடைகளிலிருந்தே குற்றச்சாட்டுக்கள் புனையப்பட்டன. எவ்விதமான அறிவுசார்ந்த முடிபுகளும் இவ்விசாரணைகளிலிருந்து பகுத்தறிய முடியாதன.
இக்குற்றச் சாட்டுகளின் பொதுவான அம்சங்களாவன: புதல்வர்களுடன் தொடர்பு வைத்திருந்தமை, அவர்கள் தப்புவதற்கு தகவல் கொடுத்தமை, ஆயுதங்கள் மறைத்து வைத்திருக்கும் இடத்தை அறிந்திருப்பது, மூத்த மகன் அலெக்ஸ் இயக்கத்துக்கு நிதிப்பொறுப்பாளராய் இருந்தவரென்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு பணம் வைத்தெடுத்துக் கொடுத்தது, ஈபிஆர்எல்எவ் இல் இருந்த மகனுக்கு அசோக் ஓட்டலுக்கு பின்னாலிருந்து சமைத்துக் கொடுத்தது, (முன்னர் ஈபிஆர்எல்எவ் முகாமாயிருந்த இடம்) ஈபிஆர்எல்எவ் இற்கு உணவு கொடுத்தது, இந்திய சமாதானப் படைக்கு உணவு கொடுத்தது, இந்திய சமாதானப் படையினருக்கு குடிபானம் வழங்கியது. இவ்வாறான குற்றச்சாட்டுக்களே தொடர்ந்தன.
மூன்றாம் நாள் பவளம்மாவின் விலங்குகள் அகற்றப்பட்டு பீப்பா ஒன்றிலுள்ள தண்ணீரில் குளிக்குமாறு கட்டளை இடப்பட்டார். பின்னர் சுரங்க அறைக்குள் கொண்டு செல்லப்பட்டு அடிக்கப்பட்டார். வெளியே துப்பாக்கிச் சூடுகள் கேட்டன. விசாரித்தவர்கள் " நீ தான் அடுத்தது " எனக்கூறினர். பவளம்மா தான் புலிகள் தொடக்கம் சகல இயக்கங்களுக்கும் உணவு கொடுத்ததாயும் விருப்பமாயின் தன்னைச் சுடலாம் என்றும் கூறினார். ஈவா அஷாந்தியை அழைத்து கைதியிடமிருந்து உண்மையை வரவழைக்குமாறு உத்தரவிட்டார். மீண்டும் பவளம்மாவுக்கு அடி உக்கிரமாக விழத் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சுரங்க அறைக்குள் கொண்டு வருவதும் அடிப்பதுமாக மூன்று நாளாக இது நீடித்தது.
பதினைந்து நாட்களின் பின்னர் பல கைதிகள் கண்கள் கட்டப்பட்ட நிலையில் விலங்கிடப்பட்டு ஒருவரை ஒருவர் பிடித்தபடி நடக்க உத்தரவிடப் பட்டனர். அனைவரும் வான் ஒன்றினுள் ஏற்றப்பட்டு ஓரிடத்தில் இறக்கப்பட்டு அதேபோல நடக்க வைக்கப் பட்டனர். இறங்கிய பிரதேசத்தில் அவ்வாறு நடப்பது கடினமாயிருந்தது. ஈவா அதற்கு தலைமை தாங்கினார். யாராவது ஒருவர் வரிசையில் இருந்து தவறினால் பின்னாலிருக்கும் அனைவருக்கும் தலையில் அடி விழுந்தது. அனைவரும் உரிய இடத்தை அடைந்தவுடன் முள்ளுக்கம்பி வேலிக்கு கீழால் தவழுமாறு உத்தரவிடப் பட்டனர். முள்ளுக் கம்பிக்குள் ஆடைகள் சிக்குப்பட்டவர்கள் நிற்காமல் தொடர்ந்து போக வைக்கப் பட்டதில் அவர்களது உடைகள் கிழிந்தன. பதிவான கூரையுடைய கட்டிடத்தினுள் அவர்கள் கொண்டு செல்லப் பட்டனர். பலரின் தலைகள் கூரையில் அடிபட்டன. அனைவரும் இருக்க வைக்கப்பட்டு உள்ளே தள்ளப் பட்டனர்.
மறுநாள் அதிகாலை அவர்களது கண்கட்டுகள் அவிழ்க்கப்பட்டன. கைவிலங்குகள் அகற்றப் பட்டன. எனினும் அவர்கள் கால்விலங்குகளுடன் அடைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் அன்றிரவு ஒரு பெரிய விருந்துபசாரத்தின் பின் விடுதலை செய்யப்படுவார்களென அஷாந்தி நக்கலாகச் சொன்னார்.
அவர்களைக் குளிக்குமாறு உத்தரவிட்டார். ஏறத்தாழ 50 கைதிகள் அங்கிருந்தனர். அம்முகாம் ஒரு சிறிய ஒற்றையடிப் பாதையுடன் கூடிய தென்னந் தோப்பில் அமைந்திருந்தது. அவர்களது அன்றைய முதல் உணவாக கத்தரிக்காயும் சோறும் மத்தியானம் கொடுக்கப்பட்டது. வரப்போகும் விருந்துபசாரம் பற்றி தொடர்ந்து ஆர்வமாக திரும்பத் திரும்ப கூறப்பட்டது.
மாலை 7 மணியளவில் கைதிகள் கட்டப்பட்டு விலங்கிடப்பட்டு இருண்ட அறையொன்றினுள் கொண்டு செல்லப் பட்டனர். ஈவா ஆரம்பித்து வைக்க எதிர்பார்த்த விருந்து தொடங்கியது. ஈவா அடிப்பதை ஆரம்பித்து மற்றவர்களையும் தடிகளை எடுத்து அடிக்குமாறு கூறினார். அடிபட்டவர்களுள் பாட்டிமார்களிலிருந்து பல பிள்ளைகளுக்கு தாயானவர்களும் அடங்குவர்.
அந்நாடுகளில் சித்திரவதை தொடர்ந்தது. சிலர் அடிக்கப்பட்டனர். சிலர் கப்பிகளில் தொங்கவிடப் பட்டனர். இரத்தம் ஓட அடிக்கப்பட்ட சிலர் தண்ணீர் மறுக்கப்பட்டு வெய்யிலில் நிற்க வைக்கப்பட்டனர்.
வெய்யிலில் நின்றவர்கள் இடையிடையே நிழலுக்குள் கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டனர். ஒரே மாதிரியான கேள்விகளும் குற்றச்சாட்டுகளும் இயந்திரத்தனமாக மீண்டும் மீண்டும் எழுப்பப்பட்டன.
ஒரு நாள் பவளம்மா இரத்தம் சிந்தும்வரை அடிக்கப்பட்டார். பின்னர் வெய்யிலில் நிற்க வைக்கப்பட்டார். பலவீனமடைந்து போய் பேச முடியாதவராய் நின்ற பவளம்மா தண்ணீர் தருமாறு கேட்டார். மலகூடத்திற்கு பாவிக்கப்படும் தண்ணீர் கோப்பை அவ்வயது முதிர்ந்தவர் முன்னால் வைக்கப்பட்டது. அகலி உயர்த்திய தடியுடன் நின்றார். ஈவா பவளம்மாவை உற்றுப்பார்த்து " உண்மையைச் சொல்! எத்தனை இந்திய இராணுவத்தினருடன் நீ கதை;திருக்கிறாய் ? ஈபிஆர்எல்எல் எத்தனை பேர்? நீ ஒரு நல்ல பெண் என்றும் தங்களுக்கு சாப்பாடு தந்தவர் என்றும் அவர்கள் எங்களுக்கு கூறினார்கள்" என்று உறுமினார்.
அன்று இரவு பவளம்மா அறைக்குள் கொண்டு செல்லப்பட்டாள். யாராவது தண்ணீர் கொடுத்தால் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டது. மறுநாள் அகலி அவரை வெளியே கொண்டு போய் வெய்யிலில் நிற்க விட்டாள். சூரியன் மேலே செல்ல பவளம்மா மயங்கிப்போனார். பழைய குற்றச்சாட்டுக்கள் திரும்பவும் சுமத்தப்பட்டு, உண்மையைக் கூறுமாறு கேட்கப்பட்டது. பவளம்மா பேச முயற்சித்தார். சத்தம் வெளிவரவில்லை. அறைக்குள் அவர் விடப்பட்ட பின் தண்ணீர் கொடுக்க வேண்டாம் என மற்றைய கைதிகள் மீண்டும் எச்சரிக்கபடுபட்டனர்.
இவ்வாறு பவளம்மா நடாத்தப்பட்டது இது இரண்டாவது தடவையாகும். முன்னர் அவர் மூன்று நாட்கள் தண்ணீர் சாப்பாடின்றி விடப்பட்டார். ஒருநாள் பப்பி என்ற கைதி- தனது சகோதரன் ஈபிஆர்எல்எவ் இல் இருக்கிறார் என சித்திரவதை தாங்காமல் ஒப்புக்கொண்டவர்- பவளம்மாவிற்கு மிகப்பெரிய ஆபத்தின் மத்தியில் மற்றவர்களுக்குத் தெரியாமல் தண்ணீர் கொடுத்தார்.
மறுநாள் காலை பவளம்மாவிற்கு வெறும் தேநீர் கொடுக்கப்பட்டது. பின்னர் மதிய உணவும் கொடுக்கப்பட்டது. அன்று அவர் சித்திரவதைக்கு ஆளாகவில்லை. அடுத்த நாள் காலை ஈவா வந்தார். " ஓ உனது குரல் திரும்பி விட்டது " என அச்சுறுத்தும் வகையில் கூறினார். முதலில் பலாமரமொன்றின் கீழ் வைத்து பவளம்மா விசாரிக்கப்பட்டார். பின்னர் தொங்க விடப்படும் அறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் அடித்து நொறுக்கப்பட்டு நிலத்தில் எறியப்பட்டு, சப்பாத்து கால்களால் மிதிக்கப்பட்டார். அவரது பல் உடைபட்டு ரத்தம் சிந்தியது. பவளம்மாவை தண்ணீர் எடுத்து வரவைத்து நிலத்தில் சிந்திய இரத்தத்தை துடைக்க வைத்தனர். " நீ இனி சாகப் போகிறாய். உண்மையை கூறி விடு " என அஷாந்தி கூறினார். பவளம்மாவின் கைகள், உள்ளங்கை உட்புறமாக இருக்குமாறு, மேசையில் கிடையாக வைக்கபட்டன. எலும்பு தெரியும் இடங்கள் தடித்த பொருள் ஒன்றினால் அடிக்கப்பட்டன. தனது குற்றங்களை ஒப்புகொள்ள முடிவு செய்யும் வகையில் இருட்டறையில் அவர் வைக்கப்பட்டார். தண்ணீர் கொடுக்கப்படவில்லை. மறுநாள் காலை ஈவா வந்து " நீ பேசுவதற்கு முடிவு செய்து விட்டாயா?" எனக் கேட்டார். தான் எல்லாவற்றையும் ஏற்கனவே சொல்லி விட்டதாக பவளம்மா சொன்னார். உண்மையை தெரிந்து கொண்ட பின்னர் விடுதலை செய்யுமாறு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருப்பதாக ஈவா சொன்னார். மூன்று நாட்களின் பின் அகலி பவளம்மாவை விசாரித்து விட்டு சுடப் போவதாக பயமுறுத்தினார். அதன் பின் எவ்வித விசாரணையும் நடக்கவில்லை.
சலீம் அதன் பிறகு வந்தார். அதிருப்தியுடன் பேசிய அவர், கைதியை அடித்துத் தான் விஷயம் எடுக்க வேண்டுமென்றும் தானே அக்காரியத்தைச் செய்யப் போகிறேன் என்றும் கூறினார்.
மோகனா குற்றவாளியின் ஒப்புதல் வாக்குமூலமென ஒன்றை சலீமுக்கு வாசித்துக் காட்டினார். இரண்டு நாட்களின் பின்னர் பவளம்மாவின் கைகளில் உருக்கிய மெழுகு ஊற்றப்பட்டது. தயாரிக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தை கைதியை வாசிக்க வைத்து வீடியோ எடுக்கப் பட்டது. இவ்வாக்குமூலத்தில், அவர் ஒருபோதுமே சொல்லாத விடயங்கள் - இந்திய சமாதானப்படைக்குச் சாப்பாடு கொடுத்தது போன்ற விடயங்கள் சேர்க்கப்பட்டிருந்தன. அதன் பின்னர் பங்கர் கட்டுவது போன்ற வேலைகளில் அவர் ஈடுபடுத்தப்பட்டார். யுத்தம் மீண்டும் தொடங்கிய பின் (யூன் 11) ஒரு நாள் விமானப்படையின் ஹெலிகொப்டர் ஒன்று மேலே வட்டமிட்டது. கைதிகள் மீண்டும் மட்டுவில் முகாமுக்கு அனுப்பப்பட்டனர். கால்விலங்கு மீண்டும் மாட்டப்பட்டது. அக்காலத்தில் பவளம்மாவிற்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது.
சிறிது காலத்தில் ஈவா இடம் மாற்றப்பட்டு, சுதா என்பவர் தலைமைக்கு வந்தார். சுதாவின் தாயாரான பரமேஸ்வரி ராஜரத்தினம் பவளம்மாவின் தாயாரினது பாடசாலை நண்பி. இக்காரணத்தால் பவளம்மாவுக்கு இனி அடிக்க வேண்டாமென சுதா உத்தரவு பிறப்பித்தார். ஏதாவது தேவையென்றால் தன்னை தனிப்பட்ட முறையில் அணுகுமாறு சுதா சொன்னார். பால் கோப்பி கொடுக்கப்பட்டு பவளம்மாவின் வயிற்றுப்போக்குக்கு சிகிச்சை செய்யப்பட்டது.
ஆகஸ்ட் ஆரம்பப் பகுதியில் ஜந்து கைதிகளை சுதா எழுந்து நிற்கச் சொல்லி அவர்களை விடுதலை செய்வதாகக் கூறினார். கால் விலங்குகளின் பூட்டைத் திறப்பதற்காக காலையிலிருந்து மதியம் பன்னிரண்டு மணி வரை காவலர்கள் முயற்சி செய்தனர். திறப்புகள் முதலில் வேலை செய்யவில்லை. துருப்பிடித்த பூட்டுக்களைத் திறப்பதற்கு அவற்றை அடித்தும், மண்ணெண்ணெய் ஊற்றியும் பூட்டுகள் திறக்கும்வரை அவர்கள் முயற்சித்தனர். மேலும் மூன்று வாரங்கள் இன்னொரு முகாமில் வேலை செய்ய வைக்கப்பட்டபின் பவளம்மா இறுதியில் முத்திரைச்சந்தையில் வைத்து விடுவிக்கப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட போது உடுத்திருந்த அதே சேலை அவர் விடுதலையான போது உக்கிக் கிழிந்து கந்தலாகி முழங்கால் வரை தான் நின்றது. அவரது சங்கில மட்டும் திருப்பிக் கொடுக்கப்பட்டது. அவரது பணம் (54.000 ரூபா) மோதிரம் ஆகியவை ஒப்படைக்கப் படவில்லை.
அது களவெடுத்த பொருட்களென கைது செய்தவர்கள் கூறிக்கொண்டனர்.
பிற்குறிப்பு: தனக்கு நடந்த அநுபவங்கள் பற்றி வெளியே சொல்ல கூடாதென பவளம்மா விடுதலையாகும் போது எச்சரிக்கை செய்யப்பட்டார். அதே சமயம் அவரது வீடு விடுதலைப் புலிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. வடக்கில் இருநஇது வெளியேறுவதற்கான விசாவை புலிகளிடமிருந்து அவர் பெற்றிருக்கவே முடியாது. மிகுந்த மனஉறுதி வாய்ந்த பெண்ணாயிருந்ததனால் அவர் 1992 இல் சில உதவிகளுடன் புலிகளுக்கு தெரியாமல் வழமைக்கு மாறான பாதையொன்றால் வடக்கிலிருந்து தெற்கையடைந்தார்.
1990 அக்டோபரில் சாவகச்சேரியிலிருந்து உடமைகள் பறிக்கப்பட்டு பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களே பவளம்மாவுக்கு இன்று அடைக்கலம் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இம்முஸ்லிம் மக்களின் ஒருபகுதியினர் தற்போது வவுனியாவின் தென்பகுதியில் வசிக்கின்றனர். அவர்கள் மிகவும் ஆதரவாகவும் அன்பாகவும் தன்னுடன் நடப்பதாயும் தனது நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருப்பதாயும் பவளம்மா கூறினார். தான் எங்காவது சென்று நேரம் கழித்து வர நேரின் அவர்களில் யாராவது ஒருவர் சைக்கிளில் வந்து தான் ஆபத்தின்றி வீடு சேர்ந்ததை உறுதிப்படுத்தியே போவரென்றும் கூறினார்.
ஒருமுறை பவளம்மா வவுனியாவில் இருந்த கோவில் ஒன்றுக்கு வணங்கச் சென்றவிடத்தில் மட்டுவிலைச் சேர்ந்த ஒருவரைச் சந்தித்தார். அவர், பவளம்மாவின் மூத்த மகன், இளைய மகன் (மெக்கானிக்) ஆகியோர் பற்றிய செய்திகளை தெரிவித்தார். புலிகள் கைதியாக வைத்திருந்து விடுவித்த ஒரு நபரிடமிருந்து பவளம்மாவைச் சந்தித்தவர் செய்தி அறிந்திருந்தார். மூத்த மகன், புலிகளால் கொழும்பிலிருந்து துணுக்காய் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு, வழமையான சித்திரவதைகளுக்காளாகி கண் கட்டப்பட்டு, கால் விலங்கிடப்பட்டு பங்கருக்குள் சுமார் 300 பேர்களுடன் மூன்று மாதம் சிறை வைக்கப்பட்டார். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார் என தெரிவிக்கப்பட்டது. இளைய மகன் முகாமொன்றில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. மெக்கானிக் மகனின் தொழில் நுட்பத்திறனை புலிகள் தங்களுக்காக பயன்படுத்துவதாகவே கருதலாம். இரு மகன்மாரிடமிருந்தும் பவளம்மா இன்னும் எந்ததகவலையும் பெறவில்லை.
புலிகளின் அதீத இயல்பைத் தெரிந்து கொண்டும் தமது குடும்பங்களை விட்டுவிட்டு இந்திய இராணுவத்துடன் பின்வாங்கிய ஈபிஆர்எல்எவ் இனரை பவளம்மா சாடினார். இறுதியாக அவர், "நான் எனது அநுபவங்களின் ஒரு சிறு பகுதியை உங்களுக்கு கூறினேன். எந்த ஒரு சுயமரியாதையுடைய ஒரு பெண்ணும் தான் கேட்டவைகளையும், பார்த்தவைகளையும் அநுபவித்தவைகளையும் மீண்டும் வெளியில் சொல்ல முன்வரமாட்டார். எந்தவொரு பெண்ணுக்கும் இவ்வாறான அனுபவங்கள் ஏற்படக்கூடாது" என கூறினார். (சமூகத்தில் பொதுவாக பேசத்தடையான வார்த்தைகள் வரும் போது இவர் தனது தன்னடக்கத்தின் நிமித்தம் அவ்வாறான பதில்களைத் தவிர்த்து வந்தார். தன்னைப் பிடித்து வைத்தவர்களின் குணஇயல்புகளைப் பற்றியும் கூறுவதைத் தவிர்த்துக் கொண்டார்.)
அவர் மேலும் தெரிவித்ததாவது. இவ்வனுபவமானது தொடர்ந்து எனக்கு வேதனையை அளிக்கிறது. ஒரு சாதாரண குடும்பப்பெண்ணும் தாயுமான எனக்கு இத்தகைய அனுபவம் ஏன் ஏற்பட்டது என்பதைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. இது ஒரு பயங்கர கனவோ என்று கூட நான் நினைப்பதுண்டு.
மற்றும் சில கைதிகள்
புலிகளால் சிறையிலடைக்கப்பட்ட பெண்கள் சிலர்
மாலினி: மானிப்பாயைச் சேர்ந்த இவர் ஈபிஆர்எல்எவ் சிறியின் மனைவி. கைது செய்கையில் பலத்த தலைக்காயத்துக்கு உள்ளானார். மூளை குழம்பிய நிலை. சிறி ஒளித்து வைத்த ஆயத மறைவிடங்களை காட்டுமாறு கூறப்பட்டு சித்திரவதைக்காளானார். ஆனால் அவருக்கு ஆயுத மறைவிடங்கள் தெரியாது. ஊசிகளால் குத்தப்பட்டு நடக்க முடியாத நிலையில் உள்ளார்.
தாவடியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்: மூத்த தமையன் ஈபிஆர்எல்எவ் இனருடன் சிநேகமாயிருந்தார் என்பதற்காக கைது செய்யப்பட்டார். வழமையான சித்திரவதைக்கு ஆட்பட்டார். இரத்தம் சிந்தும் வரை முட்கள் கொண்ட பொருட்களால் முதுகில் தாக்கப்பட்டார். பின்னர் இவர் விடுதலையானார்.
1990ம் ஆண்டு ஆரம்பத்தில் கல்முனை சந்தையில் வைத்து கைது செய்யப்பட்ட பெண். ஜந்து பெண்களுக்கு மூத்த சகோதரி. விவசாயியான இவரது தகப்பனார் குடித்து விட்டு புலிகளைத் திட்டுவார். இதனால் புலிகளால் சுடப்பட்டவர். இவ்விளம்பெண், ஆண்களால் கைது செய்யப்பட்டு 10 நாட்கள் காட்டுக்குள் இருந்த ஒரு முகாமில் வைக்கப்பட்டிருந்தார். இரண்டு மாதங்களாக பெரிய முகாமொன்றில் அடைத்து வைக்கப்பட்டு பின்னர் யாழ் குடாநாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார். நன்கு நம்பிக்கையான கைதிகள் சிலரிடம் தான் புலிகளால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவித்திருக்கிறார். இதனால் இவர் விடுதலை பெறுவாரா என்பது ஜயத்துக்குரியது.
யாழ்ப்பாணம் பெரிய கடையிலுள்ள வீடியோ கடையில் வேலை பார்த்த இளம்பெண்: இந்திய சமாதானப் படையினர் இருந்த கால கட்டத்தில் ஈபிஆர்எல்எவ் இனர் வந்து இவர் வேலை செய்த கடையில் வீடியோ படங்கள் எடுப்பர். இவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு தொடர்ந்து வாந்தியெடுத்த நிலையில் இருந்தார். முட்டை அடிக்கும் மின்சார உபகரணம் காதில் இரு நிமிடங்களுக்கு வைக்கப்பட்டது. பெரிய இரும்பு உருளை காலில் கட்டப்பட்டது.
விக்டர் அனா மேரி. (50)- பாட்டியொருவர்: இந்திய சமாதான படையின் முகாமொன்றுக்குப் போனதாக குற்றம் சாட்டப்பட்டவர். கடுமையான சித்திரவதைக்காளானார். கப்பியில் தலைகீழாகக் கட்டப்பட்டு தண்ணீருக்குள் மூழ்கடிக்கப்பட்டு சித்திரவதைக்காளானார்.
கொட்டடியைச் சேர்ந்த கிளி: இரண்டு பெண் குழந்தைகளுக்கும் மூன்று ஆண் குழந்தைகளுக்கும் தாயாவார். இவரது கணவர் ஒரு பஸ் சாரதி. அதிகம் குடிப்பவர். இவர் இந்திய சமாதானப் படையினரால் கொல்லப்பட்டார். கிளியின் மூத்த சகோதரியின் மகன் ஈபிஆர்எல்எவ் அங்கத்தவர். இவர் கிளியின் வீட்டுக்கு வருவது தான் கிளி கைது செய்யப்பட்டதற்கான காரணம்.
கந்தர்மடத்தைச் சேர்ந்த அரியமலர்: இவர் ஓர் தேனீர்க்கடைச் சொந்தக்காரர். இவரின் இரண்டு பெண் பிள்ளைகள் சாந்தி, சுதா ஆகியோர் சுமார் 20 வயது மதிக்கத்தக்கவர்கள். இந்திய சமாதானப் படை இருந்த காலத்தில் ஓர் பிரச்சனை சம்பந்தமாக ஈபிஆர்எல்எல் தலையீட்டை அரியமலர் நாடினார். ஈபிஆர்எல்எவ் ஜ சேர்ந்த தோமஸ் என்பவருடன் கதைத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டார்.
யாழ் வைத்தியசாலையில் வேலை செய்த தாதி ஒருவர்: இவருக்கு ஒரு மகளும் ஒரு வயதில் மகனும் இருந்தனர். மகளுடன் இவர் சிறைக்கு 1990 மார்ச்சில் கொண்டு செல்லப்பட்டார். இவரது மகள் பின்னர் கணவரான நடராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இவரது சகோதரன் ஈபிஆர்எல்எவ் இல் இருந்த காரணத்தால் இவர் கைது செய்யப்பட்டார். இவரது வீட்டிலிருந்து டிவி, டெக் மற்றும் மின்சார உபகரணங்கள் ஈபிஆர்எல்எவ் சொத்துக்களென காரணம் காட்டப்பட்டு சித்திரவதையாளர்களால் அபகரிக்கப்பட்டன. இவரை சப்பாத்துக் கால்களால் மிதித்து சித்திரவதை செய்தனர். இவரை சுவரில் மோதினர். பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
உடுவிலைச் சேர்ந்த ஓர் வயோதிப ஆசிரியை: இவர் ஓர் இந்தியரை மணந்திருந்தார். இவரது கணவரின் சகோதரன் இந்திய இராணுவத்தினருடன் வந்திருந்தார். தான் ஒரு மத்தியதர குடும்பத்தை சேர்ந்த படியால் தன்னுடன் புலிகள் கொஞ்சம் தாராளமாக நடந்து கொள்வர் எனக் காவலில் வைத்திருந்த ஆரம்ப காலங்களில் நம்பினார். ஆனால் அவரும் அதே சித்திரவதைகளுக்கு ஆளானார்.
கேடி என்ற ஈஎன்டிஎல்எவ் உறுப்பினரின் மனைவியும் முருகண்டி கோவில் முதலியாரின் மகளுமான ஜெயந்தினி: இவர் புலிகளால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு ஆளானார்.
ஈபிஆர்எல்எவ் தலைவர்களில் ஒருவரான சர்மாவின் மனைவியான பப்பி: இவரும் புலிகளின் சித்திரவதைக்கு ஆளானார். இவர்கள் இருவரும் இந்தியாவுக்குச் செல்லும்போது கைது செய்யப்பட்டார்கள்.
கைதிகள் விடுதலை செய்யப்டும் போது அவர்களது பெரும்பாலான சொத்துக்கள்- நகை, பணம் போன்றவை – திருட்டுப்போன சொத்துக்கள் எனக் குற்றஞ் சாட்டப்பட்டு பறிமுதல் செய்யப்படும்.
முடிவுரை:
நூற்றுக்கணக்கான பெண்கள் இவ்வாறான அனுபவங்களைச் சந்தித்திருப்பர். இவற்றைப்பற்றிய தகவல் பற்றாக்குறை ஆச்சரியத்துக்குரிய விடயமல்ல. ஆண்களின் மீதான பாரிய சித்திரவதை இந்திய இராணுவம் வெளியேறு முன்பே 1989 காலப்பகுதிகளில் புலிகளால் தொடங்கப்பட்டு விட்டது. சர்வதேச மன்னிப்புச் சபை இந்த அத்துமீறல்கள் பற்றி மார்ச் 1990ம் ஆண்டளவில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 1993ம் ஆண்டு ஆரம்ப காலம் வரை தகவல்கள் ஒப்பீட்டளவில் ஓரளவு தாராளமாகக் கிடைத்தன. ஆனால் பெண்கள் விடயத்தில் நிலைமைகள் வேறு. இந்த சிறையனுபவங்கள் பெண்களைப் பொறுத்த வரையில் பல தடவை பலாத்காரம் பண்ணப்படுவதற்கு ஒத்த நிகழ்வுகளாகத் தான் அர்த்தம் பெறுகின்றன. இவ்வாறான நிகழ்வுகளால் மனமுடைந்து போன ஒரு பெண், உடமைகள் பறிக்கப்பட்டு, பல மாதங்களுக்கு முன் உடுத்திருந்த கந்தலான உடையுடன், வெளியே அனாதரவாக விடப்படும்போது அவரது நிலை மிகவும் மோசமானது. சமுதாயத்தில் ஊடுருவியிருக்கும் பேரச்சத்தின் காரணமாய் சமூகமோ அல்லது சமய ஸ்தாபனங்களோ அவரை அரவணைத்து ஆறதல் கொடுக்காமல் தங்கள் கதவுகளை மூடிக் கொள்கின்றன. அத்துடன் காவலில் வைக்கப்பட்டு இருக்கும் தனது கணவனுக்கோ மகனுக்கோ அல்லது சகோதரனுக்கோ என்ன நடக்கும் என்ற ஏக்க உணர்வுதான் மேலோங்கி இருக்கும். எனவே அவர்கள் தங்கள் அனுபவங்களை வெளியே சொல்லக் கூடாது என்று புலிகள் அவர்களுக்கு எச்சரிப்பது தேவையற்ற ஒன்றே. மேலும் கடுமையான பாஸ் திட்டத்தை அமுல்படுத்தி இவ்வாறான சாட்சியங்கள் வடக்கிலிருந்து வெளியேறாதவாறு தமது கட்டுப்பாட்டை இறுக்கி வைத்திருக்கின்றனர். புலிகளின் பிரச்சார இயந்திரத்தின் அசுர பலம், மிகுந்த மனோதைரியம் கொண்டவர்களல்லாத மற்றெவரையும் நசுக்கிவிடும். புலிகளின் இத்தகைய தொடர்ச்சியான பிரச்சாரத்தின் கீழ் ஒருவரது மகன் ஒரு துரோகி, கணவன் அல்லது சகோதரன் ஒரு துரோகி இதனால் அப் பெண்ணுக்கும் துரோகி என்ற முத்திரை குத்தப்படுகின்றது. இதன் காரணமாக சிலர் தம்மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்கு பிராயச்சித்தம் தேடும் நோக்கில் புலிகளுக்கு பயன்படுகிறார்கள்.
பெண்களை துன்புறுத்தும் பெண்புலி உறுப்பினர்களின் நிலை என்ன? பெண்புலிகளுக்கு ஏவப்படும் பணிகள் ஆணாதிக்க சம்பிரதாய சமூகத்தின் படுமோசமான பெண்கொத்தடிமைத் தனத்தின் பிரதிபலிப்பே. இத்தகைய நடவடிக்கைகள் அவர்களை எத்தகைய விடுதலைக்கு இட்டுச் செல்லும் என்ற அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. இந்நிலையில் தங்களது மனதுள் அழுத்திக் கொண்டிருக்கும் உளைச்சல்களை எல்லாம் மற்றப் பெண்களைத் தண்டிப்பதன் மூலம் தான் தீர்த்துக் கொள்கின்றனர். மற்றைய விடுதலைப் போராட்டங்களில் நடைபெறுவது போல கருத்துப் பரிமாறல் கலந்தாராய்தல், பயனுள்ள சர்ச்சைகள் எவையுமே இவ்வமைப்பினுள் நடைபெறுவதாகத் தெரியவில்லை.
பெண்புலிகளிடையே சகோதரத்துவ ஒருமைப்பாடு ஏதும் கிடையாது. அவர்களுக்கு ஏவப்படும் பணிகள் அவர்களின் விவேகத்தையே இழிவு படுத்துவதாகும். ஒரு பெண்ணைப் பற்றி எதுவித தகவலும் தெரியாமல், மாறுபட்ட சமூக அரசியல் கருத்துக்களுடன் மாற்று இயக்கமொன்றில் அங்கத்தவராயிருந்த ஒருவரின் தாய், மனைவி, மாமி, அல்லது சகோதரி என்ற காரணத்துக்காக மட்டும் அவரிடமிருந்து உண்மையை கறக்கப் பெண்புலிகளை தலைமை ஏவுகின்றது. எமது சமூகத்தில் வழக்கிலிருந்த நெருக்கமான உறவுகளையும் அவற்றிற்கு அடிப்படையான கனிவான உணர்வுகளினதும் இயல்பான தன்மையை புலிகள் புரிந்து கொண்டதாக தெரியவில்லை.
இப்பெண் விசாரணையாளர்கள் தாம் செய்யும் சித்திரவதையின் எல்லைகளை மாத்திரமே நிர்ணயிக்கலாம். முட்டாள்தனமான உத்தரவுகளை அமுல் படுத்துவதற்காக முட்டாள்தனமான கேள்விகள் கேட்கப்படுகின்றன. அரசியல் ரீதியாகவோ அல்லது இராணுவ ரீதியாகவோ எதுவித பயன்பாடுமற்ற தகவல்கள் ஆவணங்களிலும் வீடியோக்களிலும் கம்யூட்டர்களிலும் கூட நிறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. புலிகளின் இத்தகைய அர்த்தமற்ற தொடர்ச்சியான நடவடிக்கைகளின் காரணம் - தமது கடந்த காலத்திற்கு ஒருநாள் பதில் சொல்லியேயாக வேண்டும் என்ற அவர்களின் மனப்பீதி. எதிர்கால இருப்பு தொடர்பான அவர்களின் அச்சங்கள் ஆகியவற்றின் அப்பட்டமான வெளிப்பாடே எனலாம்.
"....ஆணாதிக்க சித்தாந்தத்தில் ஊறிப்போன எமது சமூக கட்டுமானத்தில் பெண்களின் நிலைப்பாடானது அதன் ஒவ்வொரு அம்சத்தினாலும் வடிவமைக்கப்படுகிறது. தனிநபர் உறவுமுறைகள், சொத்து உரிமைகள், வேலைமுறைகள், சமூக கலாச்சார பெறுமானங்கள் அனைத்தும் ஆணாதிக்க சமூக வரையறைக்குள்ளேயே வடிவமைக்கப்படுகின்றன. இவ்வகையான ஓர் சமூகத்தின் ஆதிக்கவாத சித்தாந்தத்திலிருந்து கட்டப்பட்ட போராட்டமானது மேலும் குறுகிப்போய் போட்டியும் வீரகாவியமும் கலந்து ஆண்களை வீரர்களாயும் நாயகர்களாகவும் காட்டும் போதும், தேசியவாதம் மூர்க்கத்தனமான தேசியப்பற்றாக வெளிவரும் போதும் பெண்விடுதலை என்ற கருத்தாக்கம் இவ்வாறான போராட்டத்தின் உட்கருவுக்கு எதிராகவே எழும்.
இவ்வாறான நிலையில் பெண்களை ஆயுதம் தாங்க அழைப்பதென்பது இதிகாசங்களில் சொல்லப்பட்ட "வீரஞ் செறிந்த தாய்" என்ற பிரதிபிம்பத்தில் கட்டப்பட்டதே. இவ் இதிகாசப் பெண்கள் ஆண்களின் பெருமையை நியாயப்படுத்தி தாங்கள் போர்முனைக்குச் சென்ற அல்லது தங்கள் பிள்ளைகளையோ கணவர்களையோ காதலர்களையோ போர்முனைக்கு அனுப்பிய தாற்பரியமே இதில் அடங்கியுள்ளது.
எனவே ஆயுதம் தாங்கிய பெண்கள் பிரிவுகள் கட்டப்பட்டது புலிகள் அமைப்பை பொறுத்தவரையில் "பாவிப்பதற்கு" அல்லது ஈபிஆர்எல்எவ் போன்றவர்கள் மற்றைய விடுதலைப் போராட்டங்களிலிருந்து இரவல் வாங்கிய விடயமே. புலிகளிலுள்ள பெண்களின் அடங்கிப் போகிற நிலையானது அவர்களது சமூகம் எவ்வாறு பெண்களை நோக்குகிறதோ அவ்வாறே புலிகளும் நோக்குகிறார்கள் என்பதை தெளிவாக்குகிறது....."
ராஜனி திரானகம. முறிந்த பனை 1990
புலிகளின் தத்துவமும் நடைமுறையும் பெண்களின் உண்மையான விடுதலையுடன் பொருந்தாது என்பதையே இது விளக்குகின்றது. தலைவனின் நிழலுக்குள் கட்டுப்படும் ஏவலாள் நிலையே பெண்புலிகளின் நிலைமை. இவர்கள் உயிர் கொடுக்கும் தங்கள் வீரியத்தை இழந்து சாவின் ஏவலராக மாறியுள்ளனர். இது ஒரு பெண் கைதிகள் இருப்பது பற்றி தெரியும் முன்னரே உருவாகி விட்ட ஒரு நிகழ்வு. பெண்புலி உறுப்பினர்கள் கைதிகளான சக பெண்களை நடாத்திய கொடுமையான முறையானது ஆண் உறுப்பினர்களை பிரதி பண்ண முற்பட்ட விடயம் மட்டுமல்ல தாங்கள் பயன்படுத்தும் வார்த்தைப் பிரயோகங்களின் கொடூரத்தில் இன்பம் காணும் தன்மையிலும் ஆண்களை விட ஒருபடி மேலாக பெண்புலிகள் நடந்து கொண்டனர்.
வெளியீடு
மனிதஉரிமைக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள்(யாழ்ப்பாணம்)
மார்ச் 8 1995