கடந்த சனி (4-07-2015) அன்று யாழ் ஸ்ரான்லி வீதியில் படிப்பகம் புத்தகக்கடை தோழர் இக்பால் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தோழர் சந்திரகுமார் தலைமையில் கருத்தரங்கம் இடம்பெற்றது. இந்த கருந்தரங்கில் தோழர் இக்பால் திருமதி ஞானசக்தி சிறிதரன் திரு ரெங்கன் தேவராஜன் திரு சிறிதரன் (சுகு) திருநாவுக்கரசு திரு கருணாகரன் சிவராசா மற்றும் படிப்பகம் நிறுவனத்தின் பிரதிநிதி உட்பட பலர் கருத்துரை நிகழ்த்தினர்.
தோழர் இக்பால் அவர்கள் தனது கருத்துரையில் இன்றைய இளைஞர்களிடையே வாசிப்பு என்பது மிகவும் அருகிவிட்ட விடயமாக உள்ளது. கடந்த காலத்தில் 60வது களில் வடக்கில் நிகழ்ந்த சாதிய ஒடுக்குமுறை காரணமாக மறுக்கப்பட்ட ஆலய பிரவேசங்களுக்கான போராட்டங்கள் மற்றும் தேநீர் கடைகளில் நடாத்தப்பட்ட சாதிய பாகுபாடுகளிற்கு எதிரான போராட்டங்கள் 1ம் 2ம் உலக மகா யுத்தங்கள் ருஸ்ய சீன புரட்சி பற்றியும் மார்க்ஸ் ஏங்கல்ஸ் லெனின் ஸ்டாலின் மாவேசேதுங் எழுதிய மக்களின் விடுதலைக்கான தத்துவங்களை இவர்கள் படிக்க வேண்டும். ஏன் இவற்றை படிக்க வேண்டும் என கேள்வி எழுப்பியதுடன் இந்நூல்கள் எவ்வாறு உழைக்கும் மக்களின் வாழ்க்கை மாற்றி அமைப்பதற்க்கான வழி காட்டிகளாக இருக்கின்றன எனவும் எடுத்து கூறினார்.
மேலும் சிங்கள முதலாளித்துவ ஆட்சியாளர்கள் இனவாதம் மதவாதம் கொண்டு மக்களை பிரித்து ஆட்சி செய்து தம்மை பொருளாதார ரீதியாக கொழுக்க வைப்பதுடன் தொடர்ந்தும் மக்களை ஒன்றிணைய விடாது குழப்பங்களை ஏற்படுத்துவது பற்றி; தெரிவித்ததுடன் அண்மையில் நல்லாட்சி தருவதாக கூறி சிறுபான்மை முதலாளித்துவ கட்சிகள் மற்றும் சிறுபான்மை இன மக்களின் பெரும் ஆதரவுடன் பதவிக்கு வந்த மைத்திரி சிறிசேனாவின் நல்லாட்சியில் சிங்கள மக்களிற்கோ அன்றி சிறுபான்மை இன மக்களுக்கோ நல்லாட்சி கிட்டியுள்ளதா என கேள்வி எழுப்பியிருந்தார்.
விரைவில் இன்னும் ஒரு பொதுத்தேர்தல் வரவுள்ளது. இதில் இன்று உள்ள அனைத்து பிற்போக்கு கட்சிகளும் பாராளுமன்றத்திற்கு போய் தாம் மக்களுக்காக சாதிக்க போவதாக வாக்கு கேட்டு உங்களிடம் வருவார்கள். நீங்களும் வாக்கு போட்டு அனுப்பி வைப்பீர்கள் இது தான் காலகாலமாக நடக்கின்றது. இந்த பாராளுமன்றத்தில் சிறுபான்மை இன மக்களின் பிரச்சனைக்கோ உழைக்கும் மக்களின் பொருளாதார பிரச்சினைகளுக்கோ தீர்வு கண்டது உண்டா?
மார்க்சிய ஆசான்கள் எழுதிய பல நூல்கள் இந்த படிப்பகத்தில் உள்ளன. அவற்றை வாங்கி படியுங்கள். எவ்வாறு அவர்கள் முதலாளித்துவத்திற்கு எதிராக போராடி சோசலிச அரசை அமைத்தார்கள் என உள்ளன. கம்யூனிஸ நாடுகளில் இன்று முதலாளித்துவம் மீட்சி பெற்றுள்ளது. இது தற்க்காலிகமானது. அந்த நாடுகளில் மக்கள் மீண்டும் போராடி சோசலிச ஆட்சியை மீள அமைப்பார்கள்.
பிற்போக்குவாத கட்சிகளை ஓரம்கட்டி விட்டு இலங்கையில் சிங்கள தமிழ் முஸ்லீம் மலைய மக்கள் ஒன்றிணைந்து ஒரு போராட்டத்தை முன்னெப்பதற்கு இங்குள்ள புத்தகங்கள் பெரிதும் உதவும்.
இந்த படிப்பகம் அமைந்துள்ள கட்டடம் கடந்த காலங்களில் இடதுசாரியத்தை வடக்கில் முன்னெடுத்து செல்வதில் பாரிய பணி ஆற்றிய ஒரு இடம். மீண்டும் படிப்பகம் போன்ற சமூக நோக்குடைய ஒரு புத்தகக்கடை இங்கு ஆரம்பித்திருக்கின்றது. அதனை நன்றாக பயன்படுத்தி அறிவை வளப்படுத்திக் கொள்ளுங்கள் என பேசியிருந்தார்.
பெண்ணியவாதியான திருமதி ஞானசக்தி சிறிதரன் அவர்கள் தனது உரையில் இன்றுள்ள சமூகம் பெண்களுக்கு வாசிக்க அரசியில் ஈடுபட சிந்தனை செய்ய எந்தவித சந்தர்ப்பமும் வழங்குவதில்லை. அரசியலில் ஈடுபடுபவர்களும் போராளிகளாக இருந்தவர்களும் தமது குடும்பம் என்று வருகின்றபோது பெண்களிற்க்கான இடைவெளியையும் அவர்களின் சுதந்திர சிந்திப்பு மற்றும் செயற்பாட்டுகளிற்க்கான வழிகளை வகுத்துக் கொடுப்பதில்லை.
எனவே இந்த சமுதாயத்தில் பெண் சுதந்திரம் மற்றும் சீவியத்திற்க்கான வழிகளை கண்டடைய அதற்க்கான வாசிப்புகளின் தேவை அவசியம். கடந்த காலத்தில் இருந்த ஜனநாயக வெளி இன்று அறவே இல்லை எனலாம். கடந்த கால யுத்தம் அதன் தொடர்சியாக பெண்கள் குழந்தைகள் மீது பாரிய நெருக்கடிகள் அடக்குமுறைகள் கொடுமைகள் இடம்பெற்று வருகின்றன. இதிலிருந்து வெளிவருவதற்க்கான ஒரு வழியாக வாசிப்பு இன்றியமையாதது. இந்த வாசிப்பு பெண்களை மேலும் வளர்த்து சமுதாய மாற்றத்தில் அவர்களது பங்களிப்பின் மூலம் பெண்களின் உரிமைகளை பெற்று விடுதலை அடைவதற்கு வழிவகுக்கும் என தெரிவித்தார்.
திரு ரெங்கன் தேவராஜன் அவர்கள் தனது கருத்துரையில் குறிப்பாக மார்க்சிய லெனிய சித்தாந்தங்கள் தான் சமூகத்தை புரிந்து கொள்வதற்கும் அதற்க்காக முற்போக்காக செயற்படுவதற்கும் வடபகுதியில் கடந்த காலங்களில் பெரும்பங்காற்றியிருந்தது. இந்த படிப்பகத்தின் குறிக்கோளாக மாக்சிய லெனினிய சித்தாந்தங்களை மட்டுமே பரப்புவதாக இருக்க கூடாது. அப்படி இன்றைய காலத்தில் இருக்க முடியாது. பரந்து பட்ட எல்லாவித சிந்தனை தளங்களை உருவாக்குவதற்க்கான ஒருகளமாக இந்த புத்தக நிலையம் அமைய வேண்டும். இதன் முலம் மட்டுமே முற்போக்குதனமாகவும் சமூகத்தை மாற்றி அமைக்கிறதற்காகவும் எல்லாவித விடுதலைகளையும் அடைவதற்க்கான ஒரு அடிப்படையானதாக அமைய முடியும். இந்த படிப்பகம் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் தன்னை குறுக்கிக் கொள்ளாது ஒரு பரந்து பட்ட தளத்தில் சமூகத்திற்கு சேவை ஆற்ற வேண்டும் என தெரிவித்தார்.
திரு சிறிதரன் (சுகு) திருநாவுக்கரசு அவர்கள் கருத்துரையில் பத்திரிகைகள் செய்தி நிறுவனங்கள் கடந்த காலத்திலும் சரி இன்றும் சரி மக்களின் சிந்தனைகளை எப்படி எல்லாம் திட்டமிட்டு மழுங்கடித்துக் கொண்டிருக்கின்றன எனவும் இதனால் சமுதாயம் இன்று அழிந்து போயுள்ளமை குறித்து தனது கண்டனத்தை தெரிவித்தார். கடந்த 30 வருட யுத்தமும் அந்த யுத்தத்திற்கு துணை போன சக்திகளும் எவ்வாறு ஒரு பிற்ப்போக்கான சமுதாய உருவாக்கத்திற்கு காரணமாக அமைந்துள்ளன என விரிவாக தெரிவித்தார். இந்த நிலைமை மாற்றி அமைக்கப்பட வேண்டும். இந்த மாற்றத்திற்கு சகல சக்திகளும் தம்மை சுயவிமர்சனம் விமர்சனத்தை நடைமுறை அடிப்படையில் மேற் கொண்டு ஒரு புதிய சிந்தனை உருவாக்கத்திற்கு உழைக்க வேண்டும் என தெரிவித்தார்.
திரு கருணாகரன் சிவராசா அவர்கள் தனது கருத்துரையில் இன்றைக்கு தமிழ் சமூகத்தில் இருக்கின்ற வாசிப்பு எவ்வாறானது? என்ன வாசிக்கப்படுகின்றது? வாசிப்பு என்றால் என்ன? என்ன வாசிக்கப்பட வேண்டும்? போன்ற பல கேள்விகளை எழுப்பி இருந்தார். வாசிப்பு என்பது சமூகம் குறித்தானதாகவும் அதனை மாற்றி அமைப்பதற்க்கானதாகவும் அமைய வேண்டும். இது குறித்த பல சிந்தனைகள் கேள்விகள் தனக்குள் இருப்பதாக தெரிவித்தார். மேலும் இருக்கின்ற நூலகங்களில் மக்களிற்கு வாசிப்பதற்கு பிற்போக்கான நூல்களே வசதி செய்யப்படுகின்றன. இந்த நிலையை மாற்றி அமைக்க வாசிப்பு என்பது என்ன அது எவ்வாறு சமூகத்தை மாற்றி அமைக்க உதவ முடியம்;; இன்றைய கல்வி முறை சமூகத்திற்கு எந்தளவிற்கு பயன் தரக் கூடியது என பல முக்கியமான கேள்விகளை அங்கு வந்திருந்தவர்களின் சிந்தனையினை தூண்டும் வண்ணம் எழுப்பி இருந்தார்.
தொடர்ந்து கருத்துரையாற்றிய படிப்பகம் நிறுவனத்தின் பிரதிநிதி தனது கருத்துரையில் படிப்பகம் ஆரம்ப செயற்பாடுகள் மற்றும் இணைய உருவாக்கம் அதில் இருக்கின்ற பல ஆயிரக்கணக்கான ஆவணங்களின் தொகுப்பு மற்றும் புத்ததகக்கடை குறித்து விரிவான விளக்கத்தை அளித்ததுடன். படிப்பகத்தின் எதிர்கால செயற்பாடுகள் அதற்க்கான உதவிகள் தேவைகள் பற்றியும் படிப்பகம் நூலக சேவை பற்றியும் உரையாற்றினார்.