யூலை (2015) 4ம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் இலக்கம் 411 ல் (ஆரியகுளத்திற்கு அருகாமையில்) "படிப்பகம்" புத்தக நிலையம் திறப்பு விழா இடம் பெறுகின்றது.
பேரினவாத அடக்குமுறைக்கெதிரான முப்பது வருட ஆயுதப் போராட்டத்தின் தோல்வி, அதனை தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்ற நவதாராளமய பொருளாதார நுகர்வுக் கலாச்சாரம், கலாச்சார சீரழிவு என்பவை காரணமாக முன்னர் குடும்ப உறவுகள் அயலவர்களுடன் கூடி சமூகமாக வாழ்ந்த தமிழ் மக்கள் இன்று சமூக பற்றற்று தனக்காக மட்டுமே வாழுகின்ற- தன்னை பற்றி மட்டுமே சிந்திக்கின்ற ஒரு அபாயகரமான நிலைமைக்குள் தள்ளி விடப்பட்டுள்ளனர்.
தனது சமூகத்தின் இன்றைய அவல நிலைமைக்கு காரணம் என்ன? ஏன் இந்த நிலை வந்தது என்பது குறித்து அக்கறை கொள்ளும் உண்மை மனிதனாக இல்லாமல்; முதலாளித்துவம் திணித்துள்ள கலாச்சார சீரழிவுக்கும், நுகர்வுக் கலாச்சாரத்திற்கும் அடிமையாகி பொருளாதாரத்தை தேடி ஓடிக் கொண்டிருக்கின்றான். இதன் காரணமாக குடும்ப உறவு கிடையாது சமூக உணர்வு கிடையாது. யாருடனும் பேச்சு வார்த்தை கிடையாது. இதுவா உண்மையான மனித வாழ்வு?
இந்த நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும். மனிதன் முற்போக்கு கலை இலக்கியங்களை அறிய வேண்டும். சமூக நலன் கொண்ட இலக்கியங்கள் அந்நிய தேசத்து மொழி பெயர்ப்பு நூல்களை வாசிக்க வேண்டும். மொத்தத்தில் மனிதன் அறிவை வளர்க்க வேண்டும்.
இந்த நோக்கத்தை அடிப்படையாக கொண்டு முற்போக்கு நூல்கள், முற்போக்கு இலக்கியங்கள், உலக மொழி பெயர்ப்பு நூல்கள் மனிதனை சமூக சிந்தனை உள்ளவனாக மற்றும் உண்மையான மனிதனாக மாற்றக் கூடிய அனைத்து வெளியீடுகளும் இங்கே கிடைக்கச் செய்வதே எமது நோக்கம்.
மேலும் நூல்களை பணம் கொடுத்து சொந்தமாக வாங்கிக் கொள்ள முடியாதவர்களுக்க்காக நூல்களை இரவல் பெற்று வாசிப்பதற்க்கான ஒரு நூல் நிலைய ஒழுங்கும் இங்கு ஆரம்பிக்கப்படுகின்றது
படிப்பகம் புத்தக நிறுவனத்தினர்.
தொடர்வுகளுக்கு: சந்திரகுமார் - 0713 006 971